திமுக அணியின் மிகச்சிறந்த கருத்தியல் சொற்-பொழிவாளர்களில் ஒருவராக இருப்பவர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன். அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த நேர்காணலில் விடை தருகிறார். அத்துடன் மத்திய அரசியலில் மாநிலக் கட்சிகளின் பங்கு உயர்ந்திருப்பது பற்றியும் விளக்கம் அளிக்கிறார்.
திமுக கூட்டணிக்கு எதற்காக வாக்களிக்கவேண்டும் ?
நாடாளுமன்றத்தேர்தலை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்றாலும் தமிழகத்தில் இது திமுகவுக்கும் அதிமுகவுக்குமிடையிலான தேர்தலாகத்தான் இருக்கிறது. எனவே அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதற்கும் திமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்பதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், கடந்த மூன்றாண்டுகால ஆட்சியில் தமிழகமக்கள் ஏராளமான துயரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றுமாதங்களில் தமிழகத்தை மின்மிகைமாநிலமாக ஆக்குவேன் என்று சொன்னார் ஜெயலலிதா. மூன்று ஆண்டுகள் ஆனபின்னும் தமிழகம் இருள்சூழ்ந்தே கிடக்கிறது. விலைவாசிகள் மிகக்கடுமையாக உயர்ந்திருக்கின்றன, சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்று கேட்கக்கூடிய அளவுக்கு அன்றாடம் கொலைகளும் கொள்ளைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. எனவே இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லையென்றால் அதிமுகவின் அவலங்களுக்குத் துணைபோனதுபோல ஆகிவிடும், அதுமட்டுமின்றி கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளையும் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது தமிழகத்துக்காகவும் தமிழுக்காகவும் செய்த சாதனைகளை தலைவர் கலைஞர் பட்டியலிட்டிருக்கிறார் அதனடிப்படையிலும் திமுகவுக்கே வாக்களிக்கவேண்டும். இறுதியாக ஒன்று திமுக என்பது ஜனநாயகத்தை மதிக்கிற இயக்கம் அதிமுக சர்வாதிகாரப்போக்கைக் கொண்ட இயக்கம் என்பதால் திமுகவே சிறந்தது, அந்தக்கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என்பேன்.
நாடாளுமன்றத் தேர்தல் எனும்போது எந்தக்கட்சி மத்தியில் ஆட்சியமைக்கக்கூடியது என்று பார்த்துத் தானே மக்கள் ஓட்டுப்போடுவார்கள், நீங்கள் தமிழகத்தை மட்டுமே முதன்மைப்படுத்துவது பொருத்தமாக இருக்குமா?
நாடாளுமன்றத் தேர்தலும் மாநிலங்களுக்கடையிலாக தேர்தலாக மாறிவிட்டது என்பதுதான் இப்போதைய நிலை. 96 ஆம் ஆண்டோடு இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை என்பது ஒழிந்துவிட்டது. ஒரு கட்சி ஆட்சி திரும்ப வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்றைக்கு இந்தியா முழுமையும் செல்வாக்கோடு ஒரு கட்சிகூடக் கிடையாது, காங்கிரஸ் உட்பட. எனவே தங்கள் மாநிலக்கட்சிகளுக்கே வாக்களிப்பது என்று மக்கள் மனநிலை இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டிருக்கிற ஆ.இராசா, தயாநிதிமாறன் போன்றவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதே?
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறவர்கள் என்கிற சொல்லே அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லக்கூடாது என்பதற்கான முன்மொழிவுதான். வழக்குத் தொடுத்துவிட்ட காரணத்தாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிடமுடியாது. எங்களைப் பொறுத்தவரையில் இவை பொய்வழக்குகள் என்று கருதுகிறோம்.
தயாநிதிமாறன் தன்னுடைய தொகுதியில் இந்தியிலேயே சுவரொட்டி அடித்து பரப்புரை செய்வது விமர்சிக்கப்பட்டதே?
நான் இதுகுறித்து நண்பர் தயாநிதிமாறனிடத்திலேயே நேரடியாகக் கேட்டேன். தலைவர் கலைஞர் முன்னிலையிலேயே கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விடை, நீங்கள் தயவுசெய்து சரிபாருங்கள், அதை திமுகழகம் அடிக்கவில்லை. அங்கிருக்கிற மார்வாரிகளும் சேட்டுகளும் அடித்திருக்கிறார்கள். அவர்கள் சமூகத்துக்குள் செய்தி பரப்புவதற்காக அவர்கள் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். ஆதரவாளர்கள் அப்படிச் செய்திருக்கிறார்கள். நமக்கு நேரடிப்பொறுப்பில்லை என்கிற விளக்கத்தை அவர் கொடுத்தார்.
தேர்தல் அறிக்கையில் சில்லறைவணிகத்தில் அந்நியமுதலீட்டை எதிர்ப்போம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது திமுக ஆதரித்தது. இந்நிலையில் இந்த அறிக்கையை எப்படி நம்புவது.?
அந்தச் சூழலில் இதற்காக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தவேண்டாம் என்கிற ஒரே காரணத்துக்காக மனக்கசப்போடுதான் ஆதரிக்கிறோம் என்று சொன்னார்கள்.
தேர்தல்அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிற விசயங்களை வெவ்வேறு காரணங்களுக்காக மீறமுடியும் எனும்போது நம்பிக்கையின்மை ஏற்படுகிறதே.?
தேர்தல் அறிக்கையில் மத்தியஅரசிடம் என்னென்ன கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்று சொல்லப் பட்டிருப்பது அவை நடக்காமல் போவதற்கான சாத்தியங்களும் உண்டு என்பதை உள்ளடக்கியே இருக்கிறது. கட்சியின் நாடாளுமன்ற வலிமை, அந்த நேரத்துச் சூழல் ஆகியனவும் முக்கியப்பங்காற்றும்.
அந்தச் சொற்களை நம்பி ஓட்டுப்போடுகிறவர்களின் நிலை..?
வலியுறுத்துவோம் என்பதை நம்பி ஓட்டுப்போடலாம், நிறைவேற்றும் என்று சொல்வதற்கு நமக்கு 273 உறுப்பினர்கள் தேவை. நடைமுறையில் நாம் உறுதியளிக்கிற இடத்தில் இல்லை. வலியுறுத்துவோம் என்கிற உறுதியைத் தரமுடியும்.
அப்படியானால் மாநிலக்கட்சிகள் தனியாகத் தேர்தல்அறிக்கை வெளியிடுவதே சரியானதாக இல்லையே?
தேர்தல்முடிவுக்குப் பிறகு ஏழெட்டு மாநிலக்கட்சிகள் ஒருங்கிணைந்து அரசு அமைக்கிற நிலை வரலாம். அந்த நேரத்தில் நாம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நேரடியான நிலை ஏற்படலாம். எனவே தேர்தல் முடிவு வருகிறவரையில் நாம் எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்..?
இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகப்போகின்றன. திமுகவின் நிலையான வாக்குவங்கி மற்றும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் வாக்குகளும் திமுகவுக்குக் கிடைக்கும் என்பதால் முப்பது இடங்களில் திமுக வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
திமுகவின் வாக்குவங்கியை விட அதிமுகவின் வாக்குவங்கி அதிகம் என்று சொல்லப்படுகிறதே?
சொல்லப்படுகிற எல்லாம் உண்மைதானா என்பதை நிரூபிக்கப்படுகிற வரை நம்பமுடியாது.
அழகிரியின் தற்போதைய நடவடிக்கைகள் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
ஒரு ஒரு சிறுபாதிப்பைக்கூட மதுரை உட்பட எங்கும் ஏற்படுத்தவில்லை என்பது வெளிப்படையான உண்மை. உறுப்பினர் அட்டை பெறாத திமுககாரரான நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது ஏன் நடக்கவில்லை?
உறுப்பினர் அட்டை பெற்றால் நான் கட்சிப்பணிகளையும் ஆற்றவேண்டியிருக்கும் என்பதால் அட்டை பெறவில்லை. கட்சிப்பணியாற்ற என்னைவிடத் திறமையும் விருப்பமும் வாய்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.கருத்துப் பணியாற்றுவதில் நான் கவனம் செலுத்துகிறேன் எனவே நான் உறுப்பினராகவில்லை, உறுப்பினராகாத ஒருவர் தேர்தலில் நிற்க எந்த வாய்ப்பும் இல்லை. தேர்தலில் எனக்குப் பெரியஆர்வமும் இல்லை.
ஏப்ரல், 2014.